பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு ஆதாரம் கேட்டு பெரியாரிய தொண்டர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு ஆதாரம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பேசியதாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. பெரியார் இப்படி பேசவில்லை, இதற்கு சீமான் ஆதாரம் தர வேண்டும் என்று பெரியாரிய இயக்கத் தலைவர்கள், உணர்வாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், சீமான் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவருடைய கருத்தில் மாற்றமில்லை என்றும் கூறினார். இதனால், , பெரியார் பேசியதாக சீமான் தெரிவித்ததற்கு ஆதாரம் தரவேண்டும் என்றும் ஆதாரம் கேட்டு சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்றும் பெரியாரிய இயக்கத் தலைவகள் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஈ.சி.ஆரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்கு பெரியாரி இயக்கத் தலைவர்கள், உணர்வாளர்கள், தொண்டர்கள் திரண்டு ஆதாரம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “சீமான் தமிழ்நாட்டின் சாவர்க்கர் என்றும் சீமானுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று கடுமையாகச் சாடினார்.
முற்றுகைப் போராட்டத்தின்போது, திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். “சீமானுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தெரியாது, தமிழரசன் வைத்த நான்கு - ஐந்து கோட்பாடுகளில் ஒன்றை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். தோழர் தமிழரசனை ‘தேங்காய் சில்லு’ என்று இழிவுபடுத்தி நபர் சீமான். சீமானுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா? சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். மேடையில் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம், யோக்கியனாக இருந்தால் நேராக வரச் சொல்லுங்கள். நேர்மையாக அரசியல் தெரிந்தவராக இருந்தால் வரச் சொல்லுங்கள்.” என்று திருமுருகன் காந்தி சவால் விடுத்தார்.
பெரியார் குறித்த ஆதாரங்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம், நாங்கள் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சீமான் கேட்கிறார், இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று திருமுருகன் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமுருகன் காந்தி, “நீங்கள் (சீமான்) பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து தானே பேசினீர்கள். தம்பி நீ சொல்லு, தம்பி நீங்க குரலை சொல்லுங்கள் என்று பத்திரிகையாளரை பார்த்துதான் கேட்டார் சீமான். பெரியாரைத் தெரிந்தவர்கள் நாங்கள் கேள்வி கேட்கிறோம், பத்திரிகையாளர்களுக்கு என்ன தெரியும்? பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்கள். நான் உங்களிடம் சீமானை பற்றி கேட்க முடியுமா? கேட்க முடியாது இல்லையா? சீமான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெரியாரைப் பற்றி பேசினீர்கள் இல்லையா? பத்திரிகையாளர்களிடம் இதுதான் ஆதாரம் என்று கொடுங்கள். பத்திரிக்கையாளர்களிடம் இதுவரை ஆதாரம் தரவில்லை இல்லையா?
சீமான் நாடகமாக நடித்துக் கொண்டிருக்கிறார், ஏன் இத்தனை நாள் கழித்து நீதிமன்றத்தில் ஆதாரம் தருகிறேன் என்று சொல்ல வேண்டும்? இத்தனை நாள் சொல்ல வேண்டியது தானே? இப்போது சொல்ல வேண்டியது தானே? நண்பர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார், அவரிடம் ஆதாரம் வாங்கித் தரவேண்டியதுதானே? எச். ராஜா சொல்லி இருக்கிறார், அவரிடம் வாங்கி தர வேண்டியது தானே? இவர்களை எல்லாம் அவர் நம்பி நிற்கிறார். அவர் அங்கேயே போகட்டும், பார்த்துக் கொள்ளலாம்.” என்று திருமுருகன் காந்தி காட்டமாகப் பேசினார்.
சீமானை தமிழ்நாட்டின் சாவர்க்கர் என்று சொல்லி இருக்கிறீர்கள், உங்களை அவர் ஆரியக்குடி என்று சொல்கிறார் என்று செய்தியாளர்கள் திருமுருகன் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமுருகன் காந்தி, “அவர் எங்களை எந்த வகையில் ஆரியக் கூடிய என்று சொல்ல முடியும்? அர்ஜுன் சம்பத் இவர்களுக்கெல்லாம் ஸ்கெட்ச் போடுவேன் என்று சொல்கிறார். இந்த ஸ்கெட்ச் போடுகிற வேலையை அர்ஜுன் சம்பத் சீமான் மீது சொல்லியிருக்கிறாரா? அர்ஜுன் சம்பத்தை பார்த்தால் கட்டிப்பிடிக்கிறது, அண்ணாமலையைப் பார்த்தால் கட்டிப்பிடிக்கிறது, வெட்கமாக இல்லையா? ஒரு வடநாட்டான் கட்சியோடு கைகோர்த்து நிற்பது, கொஞ்சிக் குலாவுபவரின் கட்சியில் இத்தனை பேர், இளைஞர்கள் நிற்கிறீர்களே தயவு செய்து இந்த சீமானுடைய பித்தலாட்டத்தை தெரிந்து கொண்டு வெளியில் வாருங்கள்.” என்று திருமுருகன் காந்தி கூறினார்.
பெரியார் குறித்த கருத்தில் சீமான் பின்வாங்குவது போல் தெரியவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “ சீமான் பின் வாங்கிக் கொண்டிருக்கிறார், அவர் எங்கேயும் வெளியிலும் வரவில்லை, ஆதாரத்தையும் சொல்லவில்லை. இப்போது நாங்கள் முற்றுகையிட வருகிறோம், இத்தனை ஆயிரம் பேர் வருகிறோம் என்றதும் நான் ஆதாரத்தை நீதிமன்றத்தில் தருகிறேன் என்கிறார். ஏன் அந்த ஆதாரத்தை வெளியில் வந்து கொடுத்தால் என்ன ஆகும்? தூக்கிலா போடப் போகிறோம்? ஆதாரத்தை கொடுங்கள் சார், ஆதாரம் இருந்தால் தான் தெரியும். முதலில் அவர் புத்தகமே படிக்காத ஆள், சீமான் ஒரு தற்குறி, வேற ஒன்னுமே கிடையாது. தமிழ்நாட்டுடைய தற்குறி சீமான், தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான், அவர் மன்னிப்பு கேட்கக்கூடிய சாவர்க்கர், நாங்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க முடியாது என்று சிறைக்கு சென்றோம், நாங்கள் அவரைப் போல மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்து ஆட்கள் கிடையாது. அவர் கட்சிக்காரர் போல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்த ஆட்கள் நாங்கள் கிடையாது. நாள் குறித்து, தேதி குறித்து வந்திருக்கிறோம், நானே நேராக வந்திருக்கிறேன்” என்று திருமுருகன் காந்தி ஆவேசமாக கூறினார்.