திருச்சி, புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான திருநாவுக்கரசர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “அ.தி.மு.க-வோடு எந்தெந்த கட்சிகள் வருகிறது, எந்தெந்த கட்சியுடன் இழுபறி உள்ளது என்ற எண்ணிக்கையைச் சொல்லிவிட்டு தி.மு.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி குறித்து விமர்சனம் செய்தால் பரவாயில்லை.
அவர்கள் கூட்டணியிலேயே இன்னும் பேச்சுவார்த்தைதான் போய்க்கொண்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது.
அ.தி.மு.க சார்பில் பா.ஜ.க-வோடு கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால், பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க தொடர்ந்து முயன்று வருவதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள் தனியாக நின்றால் கஷ்டம். அமித்ஷா, `அ.தி.மு.க கூட்டணிக்காக கதவு திறந்து உள்ளது' என்று கூறுகிறார்.
இவர்கள் `கதவு திறந்திருந்தாலும் உள்ளே செல்ல மாட்டோம்' என்று கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ளதால், அ.தி.மு.க நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம். ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்திற்கு வந்துவிட்டுச் செல்கிறார். ஒரு பொதுக்கூட்டத்தால் தமிழ்நாட்டில் என்ன தாக்கம் வந்து விடப் போகிறது.
ஓ.பி.எஸ், நட்டாவை அடிக்கடிதான் சந்திக்கிறார். ஒன்று இங்கு வந்தால் பார்க்கிறார் அல்லது அங்கு சென்று பார்க்கிறார். அதில் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது?. பாரத ரத்னம் விருது அறிவித்திருக்கிறார்கள். விருது அறிவிக்கப்பட்டிருப்பவர்களின் சமூகம் சார்ந்த வாக்குகளை வாங்கிவிடலாம் என்று, தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இப்படிச் செய்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பிரதமர் அகங்கார தொனியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேசியது, பிரதமர் பதவிக்கு தகுதியில்லாத வகையில் மிக மோசமாக அமைந்துள்ளது. தென்னாட்டில் உள்ள மாநிலங்களில் இருந்து செலுத்தக்கூடிய வரிகள் முறையாக திரும்பி வருவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள்.
தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சியை நடத்த விடாமல் கலைக்கக்கூடிய நிலையில் பா.ஜ.க செயல்படுகிறது. அதையும் மீறி ஆட்சியை கலைக்க முடியாதபட்சத்தில், நிதியில் நெருக்கடி கொடுப்பது, ஆளுநர் மூலமாக நெருக்கடி கொடுப்பது, அந்த அரசை செயல்படாமல் வைத்து மக்களிடம் கெட்ட பேர் உண்டு செய்வது உள்ளிட்ட முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபடுகிறது என்பதுதான் குற்றச்சாட்டாக உள்ளது.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டதையெல்லாம் பேசி வருகிறார். அதனால்தான் அவர்களோடு தோழமையில் இருந்த கட்சிகள்கூட அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க தோழமையாக இருந்த கட்சிதான். அண்ணாமலை பேசும் விதத்தால்தான், அவர்களோடு தோழமையில் உள்ள கட்சிகள் எல்லாம் அந்தக் கூட்டணிக்குப் போக மாட்டோம் என்று சொல்கின்றனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தலைமை உள்ளது. அண்ணாமலையால்தான் வெளியே போகிறோம் என்று பேசிவிட்டு செல்கின்றனர்.
அப்படி இருக்கையில், என்ன தலைவர் அவர், அண்ணாமலை அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுக்காலம்தான் ஆகிறது. 60 ஆண்டுக்கால அரசியலைப் பற்றி பேசுவதற்கு, அவர் 40, 50 ஆண்டுக்கால அரசியல்வாதி அல்ல. அவர் எல்லை தாண்டி தி.மு.க-வையும், காங்கிரஸையும் விமர்சனம் செய்து வருகிறார். அவர் போகிற போக்கில் பேசுவதை வைத்துக்கொண்டு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும் அளவிற்கு பெரிய செய்திகளை அவர் நாட்டுக்கு கொடுத்து விடவில்லை.
மாநிலத்திற்கு மாநிலம் கட்சியின் பலம் வித்தியாசப்படும் என்பதற்காக கார்த்தி சிதம்பரம் அப்படிக் கூறியிருக்கலாம். சில மாநிலங்களில் பா.ஜ.க வலுவாக உள்ளது, சில மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் என்ற கருத்துகளை அவர் தெரிவித்திருக்கலாம்.
கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையைக் குறை சொல்லும் வகையிலோ, அந்த எண்ணத்திலேயோ அவர் கருத்து சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. அரசாங்கம் அதற்கு வழி விடவில்லை. எம்.பி நிதியும் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. அதனால் முழு திருப்தியுடன் பணி செய்தோம் என்று எங்களால் சொல்ல முடியவில்லை.
மற்ற காலங்களில் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், நான் செய்த வேலை திருப்திகரமாக இருந்தது.
அதனால்தான் தொடர்ச்சியாக மக்கள் என்னை வெற்றி பெற வைத்தனர். அப்போதெல்லாம் இருந்த மகிழ்ச்சி ஒரு சந்தோசம், இந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக மக்களின் குறைகளைத் தீர்க்க முடியவில்லை.
மக்கள் நிறைய எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், முழு திருப்தியை கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் இல்லை. மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், கட்சித் தலைமையின் முடிவும், கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியும் முடிவு செய்யும் என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.