மகளை அங்கன்வாடியில் பயில வைக்கும் நெல்லை ஆட்சியர்! குவியும் பாராட்டு!

"நாங்கள் (அரசு) தானே அங்கன்வாடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பதிலளித்து  ஆச்சர்யப்படுத்தினார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தனது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்க வைத்து மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலி, தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார். இம்மையத்தில் பயிலும் 20 குழந்தைகளுடன் கீதாஞ்சலியும் ஆரம்ப கல்வியை பயில்கிறார்.

தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், என அனைவரும் தனியாரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில், ஒரு மாவட்ட ஆட்சியரே தனது மகளை அங்கன்வாடியில் படிக்க வைத்து முன்மாதிரி ஆகியிருக்கிறார்.

ஏன் உங்கள் மகளை அங்கன்வாடியில் சேர்த்தீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, “நாங்கள் (அரசு) தானே அங்கன்வாடிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று பதிலளித்து  ஆச்சர்யப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர் ஷில்பா, “எங்கள் அங்கன்வாடிகளில் அனைத்துவித வசதிகளும் உள்ளது. அங்கு என் மகள் பலருடன் பழகுகிறாள், விளையாடுகிறாள். எங்கள் நெல்லை மாவட்டத்தில் சில ஆயிரம் எண்ணிக்கையிலான அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. நல்ல வசதியுடன் கூடிய அந்த மையங்களில் பிள்ளைகளை திறம்பட வழிநடத்த ஆசிரியர்களும் உள்ளனர். விளையாட்டுப் பொருட்கள், நல்ல உள்கட்டமைப்பு என்று சிறப்பாகவே அமைத்துள்ளோம்.

அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆப் வசதியுடன் கூடிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம், குழந்தைகளின் உயரம், எடை போன்றவற்றை கணக்கில் கொண்டு, அவர்களின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக் கொள்ள முடியும்.

அங்கன்வாடியில் இருந்து பிள்ளைகள் பள்ளியில் சேரும் பொழுது, அந்த உடல்நலம் சார்ந்த ரிப்போர்ட்கள் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து அவர்களது உடல்நலனில் எப்போதும் அக்கறை எடுத்துக் கொள்ள முடியும்” என்கிறார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close