நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சதீஷ், சேரன்மகாதேவி அருகே கூனியூரில் 115 அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி ஆய்வு செய்துள்ளார். அந்தத் தொட்டியில் சுகாதாரச் சீர்கேடு இருந்ததால் அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அவர் ஏறினார். அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொட்டியின் மீது ஏறினார்.
தைரியமாக நீர் தொட்டியின் மீது ஏறும் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய அவர், வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவராவ் நுாறடி உயர தொட்டியில் ஏறி ஆய்வு நடத்தினார். தற்போது நெல்லை ஆட்சியரும் ஆய்வு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.