ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பாக நெல்லை மாவட்ட நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடப் போவதாக ரஜினி தெரிவித்தார். அதற்கு மறுநாளே, புத்தாண்டு அன்று, ரஜினி மக்கள் மன்றத்திற்கென புதிய வெப்சைட்டை ரஜினி அறிமுகம் செய்தார். தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மன்றங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் செயலாளர் உள்ளிட்ட 5 பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 13 பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர், தகவல் தொழில்நுட்பம், மகளிர், வழக்கறிஞர் ஆகிய அணிகளுக்கு தனித்தனியாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்றத்தின் திருநெல்வேலி மாவட்ட கவுரவ செயலாளராக எஸ்.பானுசேகர், மாவட்ட செயலாளராக டாக்டர் கே.செல்வகுமார், மாவட்ட இணைச்செயலாளராக எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்களாக சி.குமரகுரு, எம்.எம்.துரை, தளபதி முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞரணி செயலாளராக கே.ஏ.என்.தாயப்பன், இளைஞரணி இணை செயலாளராக எஸ்.பகவதி ராஜன், மீனவரணி செயலாளராக ஏ.ஆல்ரின், விவசாய அணி செயலாளராக ஏ.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளராக ஜி.கார்த்திகேயன், மகளிரணி செயலாளராக பி.பவானி குமணன், வழக்கறிஞர் அணி செயலாளராக ஜாஹிர் உசேன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு பின்னர் பொறுப்புகள் அறிவிக்கப்படும் வரை மேலே அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு மன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.