திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தண்டுக்கானுர் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் கொரட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் நிலத்தை நிலஅளவீடு செய்ய வேண்டும் என கொரட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலா ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்வதாக கூறியுள்ளார்.
அதன்பின் நாளை பணம் எடுத்து வருவதாக முருகன் கூறிவிட்டு சென்றுள்ளார். இது குறித்து முருகன் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராஜியிடம் நிலம் அளவீடு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலா தன்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக மனு அளித்துள்ளார்.
அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலாவிடம் முருகன் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலம் அளவீடு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“