திருப்போரூர் அருகே நிலத்தகராறு தொடர்பான மோதலில் திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 7 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர். இவர் திருப்போரூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். செங்காடு கிராமத்தில் உள்ள இமயம்குமார் என்பவருடைய குடும்பத்தினருக்கும் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
செங்காடு கிராமத்தில் சங்கோதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே உள்ள சுமார் 350 ஏக்கர் நிலத்தை இமயம்குமார் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எம்.எல்.ஏ இதயவர்மன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், செங்காடு கிராமத்தில் சங்கோதி அம்மன் கோயில் அருகே உள்ள நிலத்தைப் பார்வையிடுவதற்காக இமயம்குமார் சென்னையைச் சேர்ந்த ரவுடிகளுடன் கோயில் அருகே சென்றார். மீண்டும் பாதை அமைப்பதற்காக முயற்சி செய்தபோது, அங்கே இருந்த எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதிக்கும் இமயம்குமாருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் இமயம்குமாருடன் வந்த ரவுடிகள் திடீரென எம்.எல்.ஏ இதயவர்மன் தந்தை லட்சுமிபதியையும் அவரது உறவினர் குருநாதனை அரிவாளால் வெட்டினர். லட்சுமிபதி தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார். அப்போது தந்தையுடன் இருந்த எம்.எல்.ஏ இதயவர்மனும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, அந்த வழியாக வந்த தையூரைச் சேந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது துப்பாக்கி குண்டு பட்டுத் தெறித்து பாய்ந்ததால் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதலில் காயம் அடைந்த லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் இருவரும் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, காயமடைந்த இமயம்குமாருடன் வந்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான கோஷ்டி மோதலில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன், அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டது குறித்து, அமமுக நிர்வாகியும் இமயம்குமாரின் சகோதரருமான தாண்டவமூர்த்தி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், எம்.எல்.ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல, இமயம்குமார் தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் கோஷ்டி மோதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி.க்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கான உரிமம் ஏற்கெனவே காலாவதி ஆகி விட்டது என்று கூறி துப்பாக்கிகளை காட்சிப் படுத்தினார். இந்த சம்பவத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று எஸ்.பி.கண்ணன் கூறினார்.
இந்த நிலையில், நிலக் தகராறு விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்ட திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.