மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய 2 வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பான விவகாரங்களில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா தர்காவில் ஆடு மற்றும் கோழிகளைப் பலியிடக்கூடாது என்று பல்வேறு மனுக்களும், அதே போன்று அங்கு ஆடு மற்றும் கோழிகளைப் பலியிட எந்த இடையூறுகளையும் அரசு செய்யக்கூடாது என பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது. அப்போது பல்வேறு கருத்துக்களையும் உத்தரவுகளையும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்குப் பின் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பின் இந்த வழக்கின் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (24.06.2025) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிடுவதற்குத் தடைவிதிக்கக் கோரிய மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதோடு இந்த விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.
அதே சமயம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்ட உத்தரவிற்கு முரண்படுவதாக நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார். இதனால் 2 நீதிபதிகளுக்கும் இடையே முரண்பட்ட தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் இந்த வழக்கைப் பொறுத்தவரை 3வது நீதிபதிக்குப் பரிந்துரைக்க வேண்டும். அல்லது புதிய அமர்வு புதிய அமர்வில் இந்த வழக்குகளை விசாரணை செய்வதற்காகத் தலைமை நீதிபதிக்கு, இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதி நீதிபதிகளுமே பரிந்துரை செய்துள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் புதிய நீதிபதி(கள்) அடங்கிய அமர்வுக்கு வழக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.