சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் கோயிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருபுவனம் போலீசார் கடுமையாக அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இளைஞர் மரணம் காரணமாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அஜித் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும். நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. பதில் சொல்ல வேண்டிய முதல்வர் முக.ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன்: தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் காவல் மரணங்கள் குறித்தும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறைக் காவலில் உயிரிழந்தது குறித்தும், தமிழக பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (NHRC) அவசர முறையீடு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அஜித்குமார் மரணம் குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து காவல் மரணங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்கு நிலவரங்கள் குறித்தும் தமிழக அரசிடம் இருந்து விரிவான அறிக்கையைப் பெற வேண்டும். காவல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தனது கடிதத்தில் கோரிக்கைகளாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய்: த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித்குமார் காவல் மரண வழக்கில் போலீசாரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதுபோலவே, இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.