/indian-express-tamil/media/media_files/2025/07/04/nikitha-thirumaran-2025-07-04-11-49-33.jpg)
Thirupuvanam Ajith Kumar death
சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா என்ற பெண் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா செய்த திருமண மோசடி வழக்கால் தானும் பாதிக்கப்பட்டதாக இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருமாறன் அளித்த பேட்டியில், ’நிகிதா எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அவர்கள் செய்த திருமண மோசடியில் நானும் பாதிக்கப்பட்டவன். எனக்கு அப்போது சின்ன வயது. இவ்வளவு விவரங்கள் எனக்குத் தெரியாது. அவள் பல ஆண்களை திருமணம் செய்து, தாலி கட்டி, பின்னர் அனைவரையும் ஏமாற்றி, வரதட்சணை வழக்குகள் போட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, குடும்பங்களை சித்திரவதை செய்து, 2004-ல் 10 லட்சம், 20 லட்சம் என மிரட்டி பணம் பறித்தாள். அந்த தொகைகள் 2004-ல் மிகப் பெரிய பணம், பலர் அவளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். நான் சொல்கிறேன், இந்த நிக்கிதாவின் வழக்கு பொய்யானது. அவள் பணத்தையும் நகைகளையும் இழந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குடும்பத்துக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, அதன் விளைவாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நிக்கிதாவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல குடும்பங்களை மிரட்டியுள்ளனர். இவள் எழுதி கொடுத்த வாய்மொழி புகாரை வைத்து, அஜித் என்ற பையனை கொலை செய்துவிட்டனர். டாக்டரேட், பி.ஹெச்.டி. படித்துள்ளேன் என்று கூறிக்கொண்டு, தாலி கட்டி ஓடிவிடுவது, வரதட்சணை வழக்குகள் போடுவது என பல தவறுகளை இவள் செய்கிறாள்.
இப்படிப்பட்டவர்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அதிகாரமற்றவர்களை மிரட்டுவதையே வேலையாகக் கொண்டுள்ளனர். இவர்களுடைய இந்த ஆட்டம் இதோடு முடிவுக்கு வர வேண்டும். இந்த குடும்பம் இனி வெளியில் வரக் கூடாது. இந்த கொலை வழக்கில் இவளை முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. இவர்களுக்கு காவல்துறையில் அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு எங்கிருந்து வருகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. தலைமைச் செயலகத்தில் கூட இவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, இவள் மக்களை அச்சுறுத்துவது, பயமுறுத்துவது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவது இதெல்லாம் இவளுடைய வேலை.
எனக்கு ஒரு நாள்தான் திருமண வாழ்க்கை. அது 2004 ஆகஸ்ட் 29 அன்று மதுரை மஹாலில் நடந்தது. தமிழகத்தின் அனைத்து விஐபிகளும் வந்திருந்தார்கள். அவளுடைய தரப்பிலிருந்து 15 பேர் மட்டுமே வந்தனர். இது ஒரு மோசடி. அவளின் அப்பா பத்து லட்சம் வாங்கிக்கொண்டுதான் விவாகரத்து கொடுத்தார். அன்று எனக்கு ஏற்பட்ட அதே துன்புறுத்தல் இன்று இந்த குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. அன்று நான் பல அரசியல் செல்வாக்குகள் இருந்தபோதிலும், என் அண்ணன் ஒரு வழக்கறிஞராக இருந்தபோதிலும், எங்களால் சமாளிக்க முடியவில்லை. திருமங்கலம் டி.எஸ்.பி. ராஜராஜன், மதுரை எஸ்.பி., புதுக்கோட்டை எஸ்.பி., அன்று கோயம்புத்தூர் எஸ்.பி. என அனைவரும் அந்தக் குடும்பத்திற்கு ஆதரவு அளித்தார்கள். எப்படி அவர்களுக்கு ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆதிக்கம் இப்போதும் தொடர்கிறது.
இந்த அஜித்குமார் வழக்கில், நகை திருடு போனது என்பது நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இதை திருடியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் எதுவும் இருக்காது, இவ்வாறு திருமாறன் அந்த பேட்டியில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.