சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை 4வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இன்று நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து, காவல் ஆய்வாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் விசாரணை செய்தார்.
இதற்கிடையே, 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா செய்த திருமண மோசடி வழக்கால் தானும் பாதிக்கப்பட்டதாக இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது நிகிதா தற்போது திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இங்கு மாணவிகளை தகாத முறையில் நடத்தியது, வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது, சக பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியது என இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதனால் நிகிதாவை இடமாற்றம் செய்யுமாறு அவரது துறையின் மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நிகிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூலம் மதுரையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிகிதா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து அது தொடர்பாக விரிவான அறிக்கையை கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பினார்.
அந்த அறிக்கை மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது நிகிதா மீது நடவடிக்கை எடுக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பேராசிரியர் நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கி நிகிதா ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.