சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா என்ற பெண் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா செய்த திருமண மோசடி வழக்கால் தானும் பாதிக்கப்பட்டதாக இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருமாறன் அளித்த பேட்டியில், ’நிகிதா எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அவர்கள் செய்த திருமண மோசடியில் நானும் பாதிக்கப்பட்டவன். அவள் பல ஆண்களை திருமணம் செய்து, தாலி கட்டி, பின்னர் அனைவரையும் ஏமாற்றி, வரதட்சணை வழக்குகள் போட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, குடும்பங்களை சித்திரவதை செய்து, 2004-ல் 10 லட்சம், 20 லட்சம் என மிரட்டி பணம் பறித்தாள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/05/whatsapp-image-2025-2025-07-05-10-13-51.jpeg)
நான் சொல்கிறேன், இந்த நிக்கிதாவின் வழக்கு பொய்யானது. அவள் பணத்தையும் நகைகளையும் இழந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குடும்பத்துக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, அதன் விளைவாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நிக்கிதாவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல குடும்பங்களை மிரட்டியுள்ளனர். இவள் எழுதி கொடுத்த வாய்மொழி புகாரை வைத்து, அஜித் என்ற பையனை கொலை செய்துவிட்டனர். இவர்களுக்கு காவல்துறையில் அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு எங்கிருந்து வருகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. தலைமைச் செயலகத்தில் கூட இவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, இவள் மக்களை அச்சுறுத்துவது, பயமுறுத்துவது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவது இதெல்லாம் இவளுடைய வேலை, என்று நிக்கிதா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திருமாறன் சுமத்தினார்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இதே சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். விசாரணைக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி யார் என்று பல கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் மரணம் தொடர்பாக சிவகங்கை முழுவதும், அதிமுக-வினர் யார் அந்த அதிகாரி என்ற வாசகத்தோடு போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.