சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதன்படி, ’அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.
ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது.
சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்’, என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பைப் மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அஜித் ஆக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்த நிலையில் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகி பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது. இதனால் அஜித்குமாரின் கொலைக்கு நீதி கிடைக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்