/indian-express-tamil/media/media_files/2025/08/29/whatsapp-image-2025-2025-08-29-13-35-12.jpeg)
Sivagangai
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம், கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ள இத்திட்டத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில், அந்த முகாமில் பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதந்து வரும் காட்சி வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து அப்பகுதி இளைஞர் கார்த்திக், திருப்புவனம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரியுடன் விரைந்து வந்து, ஆற்றில் மிதந்த மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம், மனுக்கள் கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருந்த பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், சம்பவத்துக்கு காரணமான தொடர்புடைய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், மனுக்கள் ஆற்றில் கிடந்தததற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த தி.மு.க அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவகங்கை, திருப்புவனம் வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, திருப்புவனம் வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த தி.மு.க அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.