தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், மதுரை கிளை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மதுரை நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர் சுரேஷ், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, நேற்று தீவிர விசாரணையைத் தொடங்கினார். முதல் நாள் விசாரணையே 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில், நேற்று காலை 10:40 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 11 மணி வரைக்கும் நீடித்தது. முதலில், திருப்புவனம் ADSP சுகுமாரன் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பதிவு செய்யப்பட்ட CSR, FIR ஆவணங்கள், காவல் நிலைய சிசிடிவி, மற்றும் கோயில் சிசிடிவி காட்சிகளின் DVR ஆகியவை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, கோயிலில் நடந்த தாக்குதலை வீடியோ பதிவு செய்த சத்தீஸ்வரனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்தான் கொலை நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வழக்கை ஒரு திருப்புமுனையாக மாற்றியவர்.
விசாரணையின் போது, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக DGP-க்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக சத்தீஸ்வரன் தெரிவித்தார்.
அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
சத்தீஸ்வரன் தொடர்ந்து நீதிபதி, ஒவ்வொருவரிடமும் விரிவாக விசாரணை நடத்தி, நடந்த சம்பவங்கள் மற்றும் கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தார்.
இரண்டாம் நாளாக இன்றும் (ஜூலை 3) காலை 9 அல்லது 10 மணி முதல் விசாரணை தொடர உள்ளது. மேலும், நீதிபதி சம்பவ இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.