மடப்புரம்: தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் குற்றச்செயல்களை மாநில அரசு முறையாக கண்காணிக்கவில்லை, என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் குற்றம்சாட்டினார்.
மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’திருப்புவனம் அருகே கோவில் காவலராக பணியாற்றிய அஜித் குமார் கொலை சம்பவம் பல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே பலமுறை கண்டித்துள்ளோம். அதிலும் இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்த நிகிதாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
நிகிதாவின் பின்னணியில் யார்? நகை திருட்டு புகாருக்கான விசாரணையை உத்தரவிட்ட உயர் அதிகாரி யார்? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? இந்த நகை திருட்டு புகாரே பொய்யானது, இதனை முறைப்பாடாக ஏற்ற நீதிமன்றம் கூட கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.
அஜித் குமார் கொலை வழக்கில் தமிழக அரசு சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வெறும் 3 லட்ச ரூபாய் கண் துடைப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது போதாது. அரசே நேரடியாக வீடு கட்டித் தர வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் நிகிதா தான் முதன்மை குற்றவாளி. அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், என்றார்.