Thirutthani man commit suicide for Pongal gift issue: திருத்தணியில், பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக புகார் தெரிவித்த தந்தை மீது வழக்குப் பதிவு செய்ததற்காக மனவருத்தத்தில் இருந்த மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டை குடும்பதாரர்களுக்கு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் திருத்தணியைச் சேர்ந்த நந்தன் என்ற பயனாளி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை பெற்றுள்ளார். அவர் வீட்டுக்குச் சென்று அந்த பொங்கல் தொகுப்பைப் பார்த்த பொழுது அந்த பொங்கல் தொகுப்பின் புளியில் இறந்துபோன பல்லி இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அப்போது, அந்த ஊழியர், முதியவர் நந்தனுக்கு முறையான பதில் அளிக்காமலும், அலட்சியப்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து ஊடகங்களுக்கு நந்தன் தகவல் தெரிவித்து இருந்தார். இது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் செய்தியாக வெளிவந்தது. இதனை அறிந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் தவறான தகவலை பரப்பியதாக பயனாளி நந்தன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருத்தணி ஆய்வாளர் ரமேஷ் பயனாளி நந்தன் மீது பிணையில் வெளியில் வர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்தார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பயனாளி நந்தன் தற்கொலை முயற்சி செய்யப்போவதாக அவரது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நந்தனின் மூத்த மகன் குப்புசாமி திடீரென இவரது வீட்டுக்குச் சென்று அறைக் கதவை மூடிக்கொண்டு வீட்டில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். தற்கொலைக்கு முயற்சி செய்த குப்புசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் வந்து குப்புசாமியை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் தீக்காயம் அதிகளவில் குப்புசாமியின் உடலில் பரவியது.
ஆம்புலன்ஸ் உதவியுடன் குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார்.
உயிரிழந்த குப்புசாமி சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் அதிமுக திருத்தணி 15 வது வட்ட துணை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலே தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்காணும் எண்களை அழைக்கவும். மாநில உதவி மையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil