முகமே பார்க்காத ஃபேஸ்புக் காதல்: பெற்ற தாயை கொலை செய்த கல்லூரி மாணவி!

தாயென்றும் பாராமல், அவ்விருவருடன் சேர்ந்து பானுமதியின் மார்பு, வயிறு என பல இடங்களில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்

திருவள்ளூர் அருகே ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததால், பெற்ற தாயை மகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காக்களூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த திருமுருகனாதன் என்பவரின் 19 வயது மகள் தேவிப்பிரியா, தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், மைசூரில் பணியாற்றி வரும் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரைச் சேர்ந்த விவேக் என்பவரை, ஃபேஸ்புக் மூலம் இரண்டு ஆண்டுகளாக தேவிப்பிரியா காதலித்து வந்ததாக வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த தேவிப்பிரியா, விவேக்கிற்கு தகவல் தெரிவிக்க, அவர் கும்பகோணத்தில் இருந்த தனது நண்பர்கள் விக்னேஷ், சதீஷ் ஆகிய இருவரை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்.

நேற்று மாலை வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தேவிப்பிரியா கிளம்புவதை அறிந்த தாய் பானுமதி, அவரை தடுத்து நிறுத்தவே, அங்கு வந்த இருவரும் வீட்டுக்குள் புகுந்து பானுமதியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினர். இதையடுத்து, தேவிப் பிரியாவை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கத்தியுடன் தப்பி ஓடிய இருவரையும், அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடித்து, கட்டி வைத்து அடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். தன் தாயை கொலை செய்ததைத் தவறு என்று உணராத மகள் தேவிப் பிரியா, போலீஸாரை தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் பேசினார்.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் பானுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பேஸ்புக் காதலன் விவேக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர். முகமே பார்த்திராத பேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை மகள் கொலை செய்திருக்கும் சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் நால்வரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close