திருவள்ளுவர் தினம்: டுவிட்டரில் காவி உடை திருவள்ளுவர் படத்தை நீக்கிய வெங்கையா நாயுடு

திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவரை நினைவு கூர்ந்து காவி நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த படத்தை நீக்கினார்.

By: Updated: January 16, 2020, 05:14:51 PM

திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவரை நினைவு கூர்ந்து காவி நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவர் டுவிட்டரில் இருந்து காவி நிற திருவள்ளுவர் படத்தை நீக்கியுள்ளார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். புதன்கிழமை பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.


இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது” என்று குறிப்பிட்டு அதனுடன் காவிநிற உடையில் உள்ள திருவள்ளுவர் படத்தை இணைத்து பதிவிட்டிருந்தார்.

அண்மையில், தமிழகத்தில் பாஜகவினர் காவி நிற உடையில் வரையப்பட்ட திருவள்ளுவர் படத்தை சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியிட்டதால் சர்ச்சையானது.

திருவள்ளுவர் பொது ஆண்டுக்கு முன்பு முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மிகவும் பழமையான எல்லா காலத்திலும் பொருந்து கருத்துகளையுடைய திருக்குறளையும் திருவள்ளுவரையும் எல்லா மதத்தினரும் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இருப்பினும் பல இலக்கிய ஆய்வாளர்கள் திருக்குறள் சமண நூல் என்று கூறுகின்றனர். திருக்குறளில் பொதிந்துள்ள கருத்துகள் எல்லா காலத்துக்கும் உலகில் எல்லாப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பொருந்தக் கூடியது; வாழ்க்கையில் பின்பற்றக்கூடியது என்பதால் உலகப் பொதுமறை என்றும் திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

ஆனால், பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி நிற உடையில் இந்து மத அடையாளங்களுடன் சித்தரிப்பது அவரை ஒரு மதத்தவராக சித்தரிக்கிறது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்தகைய பெருமைமிகு திருவள்ளுவரின் தினத்தில்,துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்ட காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படம் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியது.

நெட்டிசன்கள், டுவிட்டர் பயனர்கள் பலரும் வெங்கையா நாயுடு வெளியிட்ட படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, வெங்கையா நாயுடு காவி நிற திருவள்ளுவர் படத்தை நீக்கி தமிழக அரசால் பயன்படுத்தப்படும் வெள்ளை உடையில் உள்ள திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். மேலும், அறநெறி, விழுமியங்கள், நெறிமுறைகள் பற்றி தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த செவ்வியல் நூல்களில் ஒன்றாக கருதப்படும் திருக்குறல், அரசு நிர்வாகம் உட்பட பல்வேறு பாடங்களில் உள்ள கருத்துகல் எல்லா காலங்களுக்கும் பொருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பணியாளர் தவறுதலாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.


நெட்டிசன்கள், மற்றும் டுவிட்டர் பயனர்களின் கோரிக்கையை ஏற்று காவி நிற உடையில் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கியதற்கு, தருமபுரி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் அவருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Thiruvalluvar day controversy on saffronised thiruvalluvar picture removed by vice president venkaiah naidu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X