திருவள்ளுவருக்கு காவித் துண்டு, தீபாராதனை: அர்ஜூன் சம்பத் கைது
Arjun sampath Arrested at Thanjavur Pillayarpatti: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, பட்டை நாமம், ருத்ராட்ச மாலை ஆகியன அணிவித்தார். மேலும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.
Thiruvalluvar Statue Issue Arjun sampath Arrested: திருவள்ளுவர் சிலையை அவமதித்ததாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் கைது செய்யப்பட்டார். திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டியது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Advertisment
திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, தமிழக பாஜக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டதே இதன் தொடக்கம். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். எனினும் பாஜக.வினரோ, ‘காவி என்பது தியாகத்தின் நிறம். திருவள்ளுவர் ஆன்மீகம் சார்ந்தவர். அவரது படமே கற்பனையானதுதான். எனவே அதற்கு எங்கள் விருப்பப்படி ஆடை அணிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது’ என்றார்கள்.
இதற்கிடையே தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் யாரோ மர்ம ஆசாமிகள் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் விதமாக செயல்பட்டனர். இதுவும் தமிழகத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் யார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இந்தச் சூழலில் இன்று (நவம்பர் 6) இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பிள்ளையார்பட்டி சென்றார். அங்கு அவர் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, பட்டை நாமம், ருத்ராட்ச மாலை ஆகியன அணிவித்தார். மேலும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.
இதைத் தொடர்ந்து, அர்ஜூன் சம்பத்தை உள்ளூர் போலீஸார் கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.