/indian-express-tamil/media/media_files/jBQQBwppXzJYIA391Iew.jpg)
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அஷ்டத்திக்கு கொடி மரங்கள் மற்றும் சாமி கொடி உள்பட 9 கொடி மரங்கள் திங்கட்கிழமை அவிட்ட நட்சத்திரம் துலாம் லக்னத்தில் நடப்பட்டன.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அஷ்டத்திக்கு கொடி மரங்கள் மற்றும் சாமி கொடி உள்பட 9 கொடி மரங்கள் திங்கட்கிழமை அவிட்ட நட்சத்திரம் துலாம் லக்னத்தில் நடப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி இணை ஆணையர் சி.கல்யாணி, தஞ்சாவூர் துணை ஆணையர் (சரிபார்ப்பு) சூரியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தளமாக விளங்கி வருவது திருவானைக்கோயில் ஆகும் இத்திருக்கோயிலில் சுவாமி சன்னதி சுற்றிலும் அஷ்டத்திக்கு கொடிமரங்கள் உள்ளன. இந்தக் கொடி மரங்கள் பழுதடைந்த காரணத்தால் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு கொடி மரங்கள் அகற்றப்பட்டன.
இதே போன்று சாமி கொடி மரமும் பழுதடைந்து இருந்ததால், அதுவும் அகற்றப்பட்டது. இந்நிலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் மதுரை செல்வராஜ் ஸ்தபதி மூலம் புதிய கொடி மரங்கள் செய்யப்பட்டன. இந்த கொடி மரங்கள் திங்கட்கிழமை அவிட்ட நட்சத்திரம் துலா லக்னத்தில் பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டன.
வரும் ஐப்பசி மாதத்தில் நடப்பட்டுள்ள புதிய கொடி மரங்களுக்கு கவசங்கள் சாற்றப்படும் இதில் சாமி கொடிமரம் மற்றும் அட்டத்திக்கு கொடி மரங்களில் ஒன்றான வருண பகவான் கொடிமரங்களுக்கு தங்க முலாம் பூசப்படும். மற்ற கொடி மரங்கள் தாமிரத் தகட்டால் கவசங்கள் செய்யப்பட உள்ளன.
வரும் கார்த்திகை அல்லது தை மாதத்தில் இந்த ஒன்பது கொடி மரங்களுக்கும் கவசங்கள் பூட்டப்பட்டு சம்ப்ரோஷணம் செய்யப்பட உள்ளது. தங்க முலாம் மற்றும் தாமிரத் தகட்டால் செய்யப்படக்கூடிய ஒன்பது கொடி மரங்களும் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது என்று கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.