திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தேரோட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கார்த்திகை தீப விழா :
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம் .இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற வெள்ளிக்கிழமை (23.11.18) ஏற்றப்படுகிறது. இதையொட்டி நேற்று(19.11.18) காலை வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் வீதி உலா ஆகியவை நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகமும் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வருகிற 23–ந் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் மையப்பகுதியில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 22 மற்றும் 23 ஆகிய தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.