திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் பெங்களூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பெண் ஒருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15.10.2023) காலை காரும் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.