திருவண்ணாமலையில் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் பல ஆண்டுகளாக பாலியல் கொடுமையை சிறுமிகள் அனுபவித்து வந்தது தெரியவந்திருக்கிறது.
திருவண்ணாமலையில் ‘மெர்சி அடைக்கலபுரம் மிஷினரி ஹோம் ஃபார் சில்ட்ரென்ஸ்’ என்ற பெயரில் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தாய் - தந்தையை இழந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள்.
இங்கு வசித்து வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டி.கோகிலாவுக்கு ரகசிய புகார் ஒன்று வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியுடன் காப்பகத்திற்கு விரைந்திருக்கிறார் கோகிலா.
அப்போது மேற்கொண்ட விசாரணையில், 6 முதல் 17 வயதான சிறுமிகள் பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர்களை தவறான முறையில் படம் மற்றும் வீடியோ படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “இந்த காப்பகத்தில் உள்ள கம்ப்யூட்டரை ஆய்வு செய்ததில், எந்தவொரு எவிடென்ஸும் கிடைக்கவில்லை. ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி, “காப்பகத்தில் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க், மகிளா நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வகத்திற்கு அனுப்பி, இழந்த ஆவணங்களை மீட்கும் பணியில் தற்போது இறங்கியிருக்கிறோம்” என்றார்.
"கடந்த 6 மாதத்தில் மூன்று காப்பகத்திற்கு சீல் வைத்து, மொத்தம் 88 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 77 பேர் சிறுமிகள், 11 பேர் சிறுவர்கள். காப்பகத்தில் இருக்கும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மெர்சி காப்பகத்தில் உள்ள குழந்தைகள் குளிக்கும் போது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் குளியலறை ஒன்றில் கூட கதவுகள் இல்லை" என திருவண்ணாமலை ப்ரொபேஷனரி அலுவலர் தனது மனக்குமுறுலை பகிர்ந்துக் கொண்டார்.
மெர்சி காப்பகத்தை நடத்தி வரும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் லூபன் குமார் (65) அறை மற்றும் வராண்டாவில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார். பாலியல் தொல்லைக் கொடுப்பதாக லூபனுக்கு எதிராக சிறுமிகள் புகார் தெரிவிக்கையில் மெர்சியும் அவரது சகோதரரும் அவர்களை அடித்ததாக தெரிகிறது.
தற்போது லூபன் மற்றும் அவரது மனைவி மெர்சி ராணி (55), அவரது சகோதரர் மணவாளன் (50) ஆகியோர் போக்சோ, ஐபிசி மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.