/indian-express-tamil/media/media_files/2025/04/02/V1VNjHeOwehnJ5xVZwtt.jpg)
Thiruvannamalai Temple Pond Encroachment Removal
திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில், அதன் ஆன்மீகப் பெருமைகளுடன் சுற்றுலாவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலின் தாமரைக் குளம், அதன் அழகிய சூழலுக்காகவும், பக்தர்களின் புனித நீராடலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது.
ஆனால், இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், அதன் இயற்கை அழகையும், புனிதத்தன்மையையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து கழிவுகள் நேரடியாகக் குளத்தில் விடப்படுவதாகக் கூறப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு கண்டறிந்தும், 46 வாரங்களுக்கும் மேலாகியும் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தனர். "பொதுவாகவே ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்திய நீதிபதிகள், திருவண்ணாமலையில் உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை முறையாகக் கண்காணிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமனம் செய்துள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்த விரிவான அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து மின்சார வாரியம் தனியாக ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.