திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கமான நீதிமன்றப் பணிகள் தொடங்கிய போது, நீதிபதிகள் எம். சத்யநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் முறையீடு ஒன்றை செய்தார். திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் எனவும் அதற்கான தேர்தல் அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க - திருவாரூர் இடைத் தேர்தல், முழு விவரம்
கஜா புயல் பாதிப்புகளால் திருவாரூர் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரண பொருள்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் இடைத் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதனை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் தேர்தல் அறிவிப்பாணையில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுங்கள் எனவும் அறிவுறுத்தினர். மேலும் இது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால் அதனை மற்ற வழக்குகள் போன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என தெரிவித்த நீதிபதிகள் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தனர்.
இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று மதியம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க - திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் யார்?