Thiruvarur By Election, Four Corner Contest Confirmed: திருவாரூர் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அவருடன் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், வருகிற 28-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் அ.ம.மு.க. இன்று அந்தக் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்தது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை வேட்பாளராக சீமான் அறிவித்தார். அதிமுக ஆட்சி மன்றக் குழு இன்று கூடி அந்தக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஆட்சி மன்றக் குழு கூட்டத்தை நாளைக்கு (ஜனவரி 5) தள்ளி வைத்திருக்கிறார்கள். எனவே அதிமுக வேட்பாளர் அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திமுக வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சிப் பிரமுகர்களிடம் அந்தக் கட்சித் தலைமை விருப்ப மனுக்களை பெற்றது. மு.க.ஸ்டாலின், அவரது மகனும் நடிகருமான உதயநிதி பெயரிலும் பலர் பணம் கட்டி விருப்ப மனு தாக்கல் செய்தனர். எனினும் ஸ்டாலினோ, உதயநிதியோ இந்தத் தருணத்தில் போட்டியிட விரும்பவில்லை.
இந்தச் சூழலில் இன்று (ஜனவரி 4) மாலையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுநாயகமாக அமர்ந்து, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களை அழைத்து ஒவ்வொருவராக விசாரித்தார்.
திருவாரூர் தொகுதியில் அவர்களுக்கு உள்ள அறிமுகம், அவர்கள் சார்ந்த சமூக வாக்கு வங்கியின் பலம், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கும் விதம் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி ஆகியோரும் இந்த நேர்காணலின்போது உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பூண்டி கலைவாணனே வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நேர்காணல் முடிந்ததும் பூண்டி கலைவாணனை வேட்பாளராக மாலை 5.45 மணிக்கு திமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
திமுக, அமமுக என இரு முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும் போட்டி விறுவிறுப்பாகும்.
திமுக இந்தத் தேர்தலில் மொத்த கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகள் ஏற்கனவே திமுக.வுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை இன்று அறிவித்தது.
அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு வேறு கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக இங்கு வேட்பாளரை நிறுத்த விரும்பவில்லை என தெரிகிறது. எனவே இப்போதைக்கு அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டிதான்!