திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரையில் அடைமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மழை நிலவரம் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் கண்காணிப்பு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கேட்டறிந்தார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த பருவமழை காலத்தின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மூலமும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் வங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரையில் அடைமழை பெய்ததால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. மேலும் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் திருவாரூர் நகராட்சி உட்பட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் மூலம் மோட்டார் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
மேலும், வியாபார குறைவு காரணமாக பெருநிறுவனங்களை தவிர சிறிய கடைகள் மற்றும் சாலையோர கடைகள் அனைத்தும் நேற்று மதியம் 3 மணியளவிலேயே மூடப்பட்டன.
மேலும் மழை நிலவரம் மற்றும் பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கேட்டறிந்தார்.
பின்னர், இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக் கூடியதாக கணக்கிடப்பட்டுள்ள 176 பகுதிகளில் 41 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 68 பகுதிகள் மிதமான அளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகவும், 67 பகுதிகள் குறைவாக பாதிக்கக் கூடிய பகுதிகளாகவும் இருந்து வருகின்றன. மேலும் மழைபாதிப்பு அதிகமானால் பொது மக்களை தங்க வைப்பதற்கு 225 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 5 உட்கோட்டங்களிலும் 32,320 மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுக்கு மற்றும் யூக்லிப்டஸ் மரங்கள் 4 டன் வீதம் 20 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஜல்லி, மணல் மற்றும் அரளை கற்கள், சிமெண்ட் சாக்குகள் தேவையான அளவு சேகரம் செய்யப்பட்டு இருப்பில் உள்ளது. 25 மரம் அறுக்கும் இயந்திரம், 2 ஜெனரேட்டர்-, பவர் சா, ஜே.சி.பி, டிராக்டர்கள், டிப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தாசில்தார் மற்றும் வி.ஏ.ஒ.,க்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலைமையிடத்தில் தங்கி பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு, திருவாரூர் 88.2, நன்னிலம் 74, குடவாசல் 47.2, வலங்கைமான் 29.4, மன்னார்குடி 69, நீடாமங்கலம் 64.8, பாண்டவையாறுதலைப்பு 46.2, திருத்துறைப்பூண்டி 60.4, முத்துப்பேட்டை 51.2 என மொத்தம் 530.4 மி.மீ மழையும், சராசரியாக 58.9 மி.மீ மழையும் பெய்துள்ள நிலையில் இதில் அதிகளவாக திருவாரூரில் 88.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு: கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவசரகால உதவி எண் 1077, 04366-226623 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9488547941 எண்ணிற்கு தங்களது புகார்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.