திருவாரூர் தி.மு.க கோட்டை; போட்டி போட தகுதியே இல்லை: விஜய்க்கு பதிலடி கொடுத்த நேரு

"இன்றைக்கு இன்னொருவர் வந்து எங்களுடன் தான் நேரடி போட்டி என சொல்கிறார். தி.மு.க-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்லை. கலைவாணனிடம் சொன்னேன்" என்று அமைச்சர் நேரு கூறினார்.

"இன்றைக்கு இன்னொருவர் வந்து எங்களுடன் தான் நேரடி போட்டி என சொல்கிறார். தி.மு.க-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்லை. கலைவாணனிடம் சொன்னேன்" என்று அமைச்சர் நேரு கூறினார்.

author-image
WebDesk
New Update
Thiruvarur DMK Fort TN Minister KN Nehru respond to TVK Vijay Tamil News

"அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வை ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க வந்தால் அ.தி.மு.க-வை கபளீகரம் செய்து விடும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் சொல்கிறார்கள்." என்று அமைச்சர் நேரு கூறினார்.

தி.மு.க சார்பில், திருவாரூர் தெற்கு வீதியில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி அதே இடத்தில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில் த.வெ.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தது பேசு பொருளானது. அந்த இடத்தில் அடுத்த நாள் தி.மு.க பொதுக்கூட்டம் என்பதால் கூட்டம் வருகிறதா என கவனிக்கப்படும் என்ற நிலையில் தி.மு.க-வின் திருவாரூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ பூண்டி.கலைவாணன் இதற்கான ஏற்பாட்டை செய்தார். 

Advertisment

ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய்க்கு கூடியதை விட நமக்கு கூட்டம் வர வேண்டும் என உத்தரவிட்டாராம். தானும் நேரடியாக களத்தில் இறங்கி கூட்டம் வருவதற்கான ஏற்பாட்டை செய்தாராம். இதில் கிட்டத்தட்ட த.வெ.க-விற்கு கூடிய கூட்டத்திற்கு இணையாக தி.மு.கவினர் திரண்டு விட்டதாக சொல்கிறார்கள். தி.மு.க-வினர் அந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை, திருவாரூர் எப்போதும் பூண்டியார் கோட்டை என பதிவிட்டு வருகின்றனர். இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- 

ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு ஊராக செல்கிறார். இந்த அரசு என்ன செய்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார். பத்தாண்டில் நீங்கள் செய்த காரியத்தை விட முதலமைச்சர் இந்த நான்கு ஆண்டுகளில் செய்திருக்கிறார். உங்களுக்கு ஒன்று எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன், ஒரு காலத்தில் திமுக, அ.தி.மு.க இப்படிதான் மாறி மாறி இருந்தது. இன்றைக்கு இன்னொருவர் வந்து எங்களுடன் தான் நேரடி போட்டி என சொல்கிறார். தி.மு.க-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்லை. கலைவாணனிடம் சொன்னேன், நேத்துதான் கூட்டம் போட்டிருக்கிறார் என்று அவர் சொன்னார், நான் அதை அடிச்சு காண்பிக்கிறேன் என்றார். இப்போது அடிச்சி காட்டி விட்டார். சும்மா இருந்தவரை கிளப்பிட்டீங்க இனிமேல் மீண்டும் 2026-ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஸ்டாலினை அமர வைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். நான்கு வருடத்தில் அவர் என்ன செய்தார் என்பது எல்லாம் தெரியும். நான்கு வருடம் கழித்து மக்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆரம்பிக்கிறாரே நான்கு வருடம் என்ன செய்தார் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். நீ நான்கு வருடம் வீட்டில் இருந்துவிட்டு நாலு வருடம் கழித்து வெளியே வருகிறாயே நீ எதற்கு வருகிறாயோ அதற்கு தான் நாங்களும் வருகிறோம். அதிமுக பாஜக கூட்டணி என்பது ஒரு அமையாத கூட்டணி.

Advertisment
Advertisements

அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வை ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக வந்தால் அ.தி.மு.க-வை கபளீகரம் செய்து விடும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் சொல்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் மக்களுக்காக உழைக்கிறார். முதலமைச்சரை காப்பது தான் நமது கடமை. பாலு சொன்னதை போல அவரைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. நிச்சயமாக இந்த டெல்டா பகுதி என்பது திமுகவின் கோட்டை. அதிலும் திருவாரூர் என்பது மிக மிக கோட்டை.

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை இருப்பது தமிழ்நாட்டில் தான், அதிக பெண்கள் வேலை பார்ப்பதும் தமிழ்நாட்டில் தான். எனவே தான் இந்த நாட்டை முன்னேற வைக்கின்ற ஸ்டாலினை மீண்டும் மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். நம்முடைய கழக ஆட்சி என்பது சிறந்த ஆட்சி. நம்மையெல்லாம் வாயை கட்டி போட்டு மேடையில் ஏற்றி விட்டார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் மேற்கொண்டு நாங்கள் எதையும் சொல்ல முடியாது. இந்த கழகத்தை கட்டி காப்பது தான் நமது தலையாய கடமை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செய்தி: க.சண்முகவடிவேல்

Thiruvarur K N Nehru

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: