திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி கிராமத்தில், புத்தாறு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நண்பர்கள் நான்கு பேரும் ஒரு காரில் கீழ்குடி கிராமம் வழியாகச் சென்றபோது, புத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகே காரை நிறுத்திவிட்டு குளிக்கச் சென்றுள்ளனர். அந்த மகிழ்ச்சியான தருணம், யாரும் எதிர்பாராத விதமாகப் பெரும் சோகமாக மாறியது.
குளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர். இவர்கள் தத்தளிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், ஜெயக்குமார், ஹரிஹரன், மணிகண்டன் (வில்லியனூர்) மற்றும் மணிவேல் (முருகன்குடி) ஆகிய நான்கு இளைஞர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே நேரத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பலியானது நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்