scorecardresearch

தனியார் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அசத்தும் கரூர்; மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி முயற்சி

வேலை தேடுபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதே பாலம் திட்டத்தின் நோக்கம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் டி பிரபுசங்கர் தெரிவித்தார்

தனியார் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அசத்தும் கரூர்; மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி முயற்சி
டி.பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர், கரூர்

Arun Janardhanan 

படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஒரு நல்ல வேலை கிடைக்க நம்பிக்கையுடன் கடைசியாகச் செல்லும் இடம் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மாவட்ட அலுவலகம். இருப்பினும், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள பாலம் திட்டம் அல்லது நகர்ப்புற வாழ்வாதார மையம் அதைச் சிறப்பாகச் செய்து வருகிறது. மேலும் பெரும்பாலான அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் போலல்லாமல், இது பெரும்பாலும் தனியார் வேலைகளில் கவனம் செலுத்துகிறது.

மேற்கு தமிழ்நாட்டின் திருப்பூரின் ஜவுளி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள கரூர், தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டம், குறிப்பாக ஜன்னல் திரைகள், தரை விரிப்புகள், கையுறைகள், மேசை விரிப்புகள் போன்ற உள்நாட்டு ஜவுளி பொருட்களுக்கு கரூர் மிகவும் பிரபலமானது. மாவட்டம் நிர்வாகம் இந்தத் துறைகளைச் சேர்ந்த 28 தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது. மார்ச் 2022 இல் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில்முனைவோர் தினசரி வருகையின் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகம் திணறி வருகிறது.

இதையும் படியுங்கள்: மோடி ஆட்சியில் இந்தியா ஒரே குடும்பமாக மாறி இருக்கிறது: கோவை கல்லூரி விழாவில் ஆர்.என் ரவி பேச்சு

வேலை தேடுபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதே பாலம் திட்டத்தின் நோக்கம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் டி பிரபுசங்கர் தெரிவித்தார்

“உற்பத்தியாளர்களுக்குத் தேவையான திறன்களை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம், பின்னர் உள்ளூர் தொழில்களுக்குத் தேவையான திறன்களில் பயிற்சி அளிக்கிறோம். இதுவரை 14 துறைகளில் 345 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்,” என்று ஆட்சியர் கூறினார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறந்த ஆளுமை விருதுகளை வென்ற 19 பேரில் பிரபுசங்கரும் ஒருவர். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் விருதுகள், நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையைத் தொடும் வகையில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு பிரிவில் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் வெற்றி பெற்றார்.

”ஒரு வருடத்திற்குள் சுமார் 500 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை பெற்றுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பேக்கரிகள், நகை அலகுகள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட தனியார் துறையில் வேலை பெற்றுள்ளனர். திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பு அவர்கள் வருங்கால வைப்பு நிதி (PF), போனஸ் மற்றும் பிற பணியாளர் நலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. பாலம் திட்டத்தின் நோக்கம் ஒரு புதுமையான யோசனையை மட்டும் கொண்டு வராமல், பல தெரிந்த மற்றும் அறியப்படாத அரசாங்க திட்டங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதாகும்,” என்று ஆட்சியர் பிரபுசங்கர் கூறினார்.

வேலை தேடுபவர்களின் அணுகலை எளிதாக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. கரூரில் உள்ள முதன்மை மையத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும் நிலையில், விண்ணப்பதாரர்கள் நேரடியாகவும் மையத்தை அணுகி வருகின்றனர்.

மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இளநங்கை கூறுகையில், ”சராசரியாக, தினமும், 10 வேலை தேடுவோர் வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை 30ஐத் தொடலாம். பிளம்பர்கள், ஆசிரியர்கள், எலக்ட்ரீஷியன்கள், கார்பெண்டர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை தேடும் பொறியியல் பட்டதாரிகள் போன்ற அனைத்து தரப்பு ஆர்வலர்களையும் நாங்கள் சந்திக்கிறோம்,” என்று கூறினார்.

தனியார் பங்குதாரர் நிறுவனங்கள் காலியிடங்கள் குறித்து மையத்திற்கு தெரிவித்தவுடன், வேலை தேடுபவர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பணிக்கான நேர்காணல் மற்றும் தேர்வுகள் வாரத்திற்கு இரண்டு முறை திட்ட அலுவலகத்தில் நடைபெறும். வேலை வாய்ப்பு வழங்கப்பட்டால், திட்டம், நிறுவனம் மற்றும் பணியாளர் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

பாலம் திட்டத்தின் மூலம் வேலை கிடைத்த பலரில் 35 வயதான மகாலட்சுமியும் ஒருவர். அவர் பணிபுரியும் ஏற்றுமதி தையல் அலகும் திட்டத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது. அந்த நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஸ்டார்ட் அப்களுக்கான கடனைப் பெற்றது.

“சுமார் 25 உறுப்பினர்கள் இங்கு பணிபுரிகின்றனர். ஏற்றுமதித் தரம் வாய்ந்த உள்நாட்டு ஜவுளிப் பொருட்களின் தையல் தொடர்பான இந்த அலகு பொதுவான வாழ்வாதாரக் குழுக்களின் கீழ் அமைக்கப்பட்டது. நிபுணத்துவம், இயந்திரங்கள் மற்றும் சந்தை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான அணுகல் தேவைப்படுவதால், ஒரு தனியார் ஆபரேட்டர் யூனிட்டை நடத்துகிறார்,” என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டமானது சவால்களையும் சந்தித்துள்ளது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே பணியிலிருந்து வெளியேறும் நிகழ்வுகள் உள்ளன. இதை சரிசெய்ய, ஒரு வருடத்திற்கு முன் வெளியேறும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் ஆண்டு சம்பளத்தில் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் அபராத விதியை அறிமுகப்படுத்துவது குறித்து திட்டம் பரிசீலித்து வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகமாக செயல்படுவதைத் தவிர, பாலம் திட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவும் உள்ளது. மாவட்ட கலெக்டரால் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய உற்பத்தி அலகுகள், வணிகங்கள் போன்றவற்றைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: This government employment exchange is a firm believer in doing a good job