”இந்தாண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்”: தமிழிசை தகவல்

இந்தாண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்கும் என, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்ததாக, தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்கும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்ததாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்கள் எளிமையாகவும், மற்ற மாநில மொழி வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டன. மேலும், மாநில மொழிகளில் நீட் பாடத்திட்ட புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதேபோல், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் நீட் தேர்வில் தோல்வியை தழுவும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்தது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை போனில் தொடர்புகொண்டு பேசினேன். நீட் தேர்வு தொடர்பாக தமிழக மாணவர்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தேன். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள், மாநில பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறினேன்.

அதற்கு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்கும் எனவும், சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டம் இணைந்தே நீட் பாடத்திட்டம் இருக்கும். தமிழக மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என உறுதியை தெரிவியுங்கள். கடந்தாண்டு என்னென்ன குறைகள் இருந்ததோ, அவை இந்தாண்டு களையப்படும். தமிழக மாணவர்கள் நம்பிக்கையுடன் இத்தேர்வை எதிர்கொள்ளலாம் என உறுதியளித்தார். தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக பாஜக என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

×Close
×Close