Thol Thirumavalavan Called On Vaiko: வைகோ - திருமாவளவன் திடீரென சந்தித்து கருத்து பறிமாறிக் கொண்டார்கள். இதன் மூலமாக மதிமுக - விடுதலை சிறுத்தைகள் இடையே உருவான கருத்து மோதலை தீர்த்திருக்கிறார்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இடையே பாசப்பிணைப்பு உண்டு. திருமாவளவன் சென்னையில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோதே, கல்லூரி விடுதிக்கு வைகோவை அழைத்து மாணவர்கள் மத்தியில் ஈழப் பிரச்னையை பேச வைத்தவர்!
அண்மையில் புதிய தலைமுறை நேர்காணலில், ‘தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கு திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணி’ பற்றிய கேள்விக்கு வைகோ டென்ஷன் ஆனார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துகளை கூறினார்.
வைகோவின் பேச்சில் நில பிரபுத்துவ, ஆதிக்க உளவியல் வெளிப்பட்டதாக வன்னியரசு குறிப்பிட்டது, வைகோவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘வன்னியரசுவை இப்படி எழுதச் சொன்னது யார்?’ என கேள்வி எழுப்பிய வைகோ, 2006 தேர்தலில் இரு தவணைகளாக விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் செலவுக்கு ரூ 50 லட்சம் வழங்கியதாக கூறினார்.
இதற்கு பதில் சொன்ன திருமா, ‘ஒரே தவணையாக தேர்தல் செலவுக்கு ரூ 30 லட்சம் வாங்கியது உண்மை. ஜெயலலிதா உள்ளிட்டவர்களிடமும் தேர்தல் செலவுக்கு கட்சிக்காக பணம் பெற்றிருக்கிறேன். தனிப்பட்ட வகையில் யாரிடமும் நான் பணம் பெற்றதில்லை’ என விளக்கம் அளித்தார்.
வன்னியரசுவை கண்டித்ததாக கூறிய திருமா, சர்ச்சைக்குரிய முகநூல் பதிவையும் அகற்ற வைத்தார். இந்த விவகாரத்தில் வைகோ ஆத்திரப்பட்டாலும், திருமாவளவன் பக்குவமாக எதிர்கொண்டார். இந்த பதற்றமான சூழலிலும், ‘வைகோ அண்ணன், எனது பொதுவாழ்வு இன்ஸ்பிரேஷன்களில் ஒருவர்’ என குறிப்பிட்டார் திருமா. வைகோவும் ஒரு பேட்டியில், ‘திருமா எனது தம்பி’ என்றார்.
இந்தச் சூழலில் இரு தரப்புக்கும் பொதுவான சிலர், ‘நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசுங்கள்’ என அறிவுறுத்தினர். திருமா இதில் எந்த தயக்கமும் வெளிப்படுத்தாமல், வைகோவை சந்திக்க சம்மதம் கூறினார். அதன்படி இந்த சந்திப்பு இன்று (டிசம்பர் 11) பகல் 12 மணிக்கு வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்தில் நடந்தது.
இதில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் இடையிலான பூசலுக்கு முடிவு கட்டப்பட்டதாக தெரிகிறது. சந்திப்புக்கு பிறகு வைகோவும், திருமாவும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். ‘நீர் அடித்து நீர் விலகாது’ என குறிப்பிட்டார் வைகோ.