ச.செல்வராஜ்
திருமாவளவனை விரைவில், ‘டாக்டர் திருமாவளவன்’ என அவரது கட்சியினர் அழைப்பதை பார்க்கலாம். இது கவுரவப் பட்டம் அல்ல, படித்து பெறவிருக்கும் பட்டம் என்பதே சிறப்பு!
திருமாவளவன், ஏற்கனவே சட்டப்படிப்பு முடித்தவர்! தமிழ்நாடு தடய அறிவியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான், பொது வாழ்வுக்கு வந்தார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான அரசியலையும், தமிழ் தேசிய அரசியலையும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வருகிறார்.
திருமாவளவனை தற்போது, ‘எழுச்சித் தமிழர்’ என்கிற அடைமொழியுடன் விடுதலை சிறுத்தைகள் அழைக்கின்றனர். அதி விரைவில் அவரை, ‘டாக்டர் திருமாவளவன்’ என அழைப்பதைக் காணலாம். ‘இந்த டாக்டர் பட்டம், வேறு பல அரசியல்வாதிகளைப் போல பல்கலைக்கழகங்களை சரிகட்டி பெறவிருக்கும் கவுரவப் பட்டம் அல்ல. எங்கள் தலைவர் படித்து பெறவிருக்கும் பட்டம்’ என பெருமிதம் கலந்து கூறுகிறார்கள் சிறுத்தைத் தொண்டர்கள்.
திருமாவளவன், பி.ஹெச்.டி. எனப்படும் ஆய்வுக்கான ‘டாக்டரேட்’ பட்டத்தை பெறவிருக்கிறார். தமிழக அரசியலில், ‘எம்.பி.பி.எஸ்.’ முடித்த தலைவர்களாக ராமதாஸ், கிருஷ்ணசாமி, தமிழிசை செளந்தரராஜன் உள்பட பலர் இருக்கிறார்கள். ஆய்வுப் பட்டம் பெற்ற தலைவர்கள் மிக அபூர்வம்!
திருமாவளவன், இதற்காக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் இந்த ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருக்கிறார். அவரது ஆய்வுப் பாடம், மதம் தொடர்பானது என்கிறார்கள். தற்போது அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஆய்வுப் படிப்பிலும், அது தொடர்பான பேப்பர் சப்மிஷனிலும் மும்முரமாக இருக்கிறார் திருமா.
திருமாவளவனின் ஆய்வுப் படிப்பு தொடர்பான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும். அதன் பிறகு ‘டாக்டர்’ திருமாவளவனை எதிர்பார்க்கலாம்.