சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன என்பது தொடர்பாக திருமாவளவன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011 க்கு பிறகு நடைபெறவில்லை. கொரோனா காலகட்டம் என்பதால் 2021 இல் காலவரையின்றி உங்கள் அரசால் ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாததால் பல்வேறு மற்ற கணக்கெடுப்புகளும் நடைபெறாமல் இருக்கிறது. குறிப்பாக, பொருள் மற்றும் சேவைக்கான நுகர்வு கணக்கெடுப்பு, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல முக்கியமான கணக்கெடுப்புகள் நடைபெறாமல் இருக்கிறது.
இதனால் உணவு பாதுகாப்பு சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் 2011 கணக்கெடுப்பின்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநில அரசுகளால் எஸ்சி / எஸ்டி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“