Thol Thirumavalavan Latest News: 'முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?' என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி விடுத்திருக்கிறார். திராவிடக் கழக விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தக் கேள்வியை திருமாவளவன் எழுப்பினார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்து மதம் சார்ந்து வைக்கிற விமர்சனங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் திராவிடர் கழக விருது வழங்கும் விழாவில் அவரது சமீபத்திய பேச்சும் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ‘தற்போது முருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள். முருகன் தமிழ்க்கடவுள் எனும் வழுக்குப்பாறையில் கால்வைத்தால், அது சனாதனம் என்ற படுகுழியில் தள்ளிவிடும். ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக் கடவுளாக முடியும்? தைப்பூசத்துக்கு மட்டும் விடுமுறை விட்டுவிட்டால், தமிழர்கள் எல்லாம் தலைநிமிர்ந்து விடுவார்களா?
குல தெய்வ வழிபாட்டையும் பெருதெய்வ வழிபாடாக மாற்றிவிட்டார்கள். எனவே, குலதெய்வ வழிபாடும் சனாதன மயமாகி வருகிறது. இந்து என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி கட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள்’ என பேசினார் தொல்.திருமாவளவன்.
இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"