சுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவருமான ராமசாமி படையாச்சி பிறந்தநாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவரிடம், “கடந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸூடன் இணைந்து செயல்பட்டீர்கள். இனிவரும் காலங்களில் செயல்பட வாய்ப்புள்ளதா? என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திருமாவளவன், “அரசியல் ரீதியான நிலைப்பாடுகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். எந்தக் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம்.
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி விழாவில் கலந்துகொண்டதை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது; நல்லிணக்கத்தின் அடிப்படையில் கைகோர்த்து நிற்கிறோம்” என்றார்.
தொடர்ந்து திமுக வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு, “திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்ப்டடுவருகிறது என நம்புகிறேன்” என்றார்.
மேலும், “இந்தியா கூட்டணியில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுபடுவோம். ஒரே நாடு ஒரே தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை” என்றார்.
இதையடுத்து சனாதனம் குறித்து பேசுகையில், “சனாதன ஒழிப்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. இது இந்து மக்கள் மீதான தாக்குதல் அல்ல. குழப்ப வேண்டாம்” என்றார்.
மேலும், இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார்களுக்கு எதிரானது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“