ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்று பதில் கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழகத்தில் தற்போது விவாதப்பொருளாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய சர்ச்சை பேச்சு தான். சமீபத்தில் இயக்குனர் பா.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது,
''மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்" என்றார்.இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி எழுந்து வரும் நிலையில், ராஜராஜ சோழனை இழிவு படுத்தி பேசியதாக இயக்குநர் ப.ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தோ அல்லது கண்டனம் கூறியோ விடுதலை சிறுத்தை கட்சி அமைதி காத்தது அடுத்த விவாத்தை ஒருபுறம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
அவர் பேசியதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும். தமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும். ஆபாச வலைதளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் ” என்று கூறினார். இறுதியாக ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்ற கருத்தையும் திருமாவளவன் பதிவு செய்தார்.