/indian-express-tamil/media/media_files/p3YHkNMzB8GPw2E9069y.jpg)
Thol Thirumavalavan
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சென்னை புறப்படும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்; திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு, குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வில்சன், கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
இந்த விவகாரத்தில் நேர்மையாகவே விசாரணை நடந்துள்ளது, நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது வியப்பாக உள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் அல்லது சிபிஐ விசாரணை கோரலாம், என்றார்.
மேலும் பேசிய திருமாவளவன், தமிழ், திராவிட மொழிகளின் தாய் என்பதற்குப் பல வரலாற்று மொழியியல் வல்லுநர்கள், குறிப்பாக தேவநேயப் பாவாணர் போன்றோர், வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளனர். பல்வேறு மொழியியல் அறிஞர்களும் இந்த உண்மையை வெவ்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம். ஆனால், வரலாறு எப்போதும் நிலையானது; உண்மை ஒருபோதும் மாறாது. இதைப் யாராலும் மறுக்க முடியாது. கால்டுவேல் அவர்களின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" நூலிலும் இந்த உண்மை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழிலிருந்துதான் பிற திராவிட மொழிகள், சமஸ்கிருதக் கலப்பால் உருவாகியுள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று உண்மையாகும், என்று திருமாவளவன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.