பெண்கள் தோள் சீலை அணியும் உரிமைக்காக 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் தோள்சீலைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் வழியாகவே பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமை கிடைத்தது.
இந்த தோள் சீலைப் போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது.
நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோள் சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டுவிழாவில், நான் பங்கெடுப்பதிலே மிகுந்த பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
சனாதன சாதிய பாகுபாட்டிற்கு எதிராக, சமூகநீதிக்கு வித்திட்ட தோள்சீலைப் போராட்டம் என்ற அடைமொழியைக் கொடுத்து, அதனுடைய 200-வது ஆண்டுவிழாவை ஒரு சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக இன்றைய தினம் எழுச்சியோடு ஏற்றத்தோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஒருங்கிணைப்புக்குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் இருந்தது என்பதையும் அந்த இழிநிலையை வீரமிகு போராட்டத்தால் அடித்து நொறுக்கப்பட்டது என்பதையையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உனர்த்துவதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நடத்தப்பட வேண்டும்.
இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால் இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை; ஒருகாலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போக முடியாது; பஞ்சமர்களும் குஷ்டரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டியிருப்பார்கள். நாடகக் கொட்டகைக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் சாப்பிட தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிககி வைத்தார்கள். 80 வயது கடந்திருக்கக்கூடிய பெரியவர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்குத்தான் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமுதாயம் கடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம், இப்பொழுதி எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். அப்படிப்பட்ட காலமாற்றத்தை உணர்த்தும் விழாவாக இந்த தோள் சீலைப் போராட்டத்தினுடைய 200வது ஆண்டு விழா அமைந்திருக்கிறது.
கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தக் குடி, தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைச் சிறந்த நகர நாகரிகமாக வைகைக்கரை நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி” என்று கூறினார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் “அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு அரசுப் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“