தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 80 தெருக்களின் சாதிப்பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காந்தியின் பிறந்த நாளான நேற்று தூத்துகுடியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 33 பஞ்சாயத்துகள், சாதி பெயர்கள் கொண்ட 80 தெருக்களின் பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றியது.
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், சாதி பெயர்கள் கொண்ட தெருக்களின் பெயர்களுக்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர்கள், ஆய்வாளர்கள், தமிழில் புலமை வாய்ந்த நபர்களின் பெயர்களை வைக்க கிராம பஞ்சாயத்திற்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் 80 தெருக்களின் பெயர்களை மாற்றுவதற்கான தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் அரசு ஆவணங்களில் இந்த மாற்றங்கள் பதிவு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றில், முகவரிகள் மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “ சாதியை குறிக்கும் விஷயங்கள் இரு சமூகத்திற்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. பள்ளிகளில் கூட பிரிவினையை இது உருவாக்கும். இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் ஏற்றத்தாழ்வை குறைக்கும்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“