தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: திங்கட்கிழமை விசாரணையை தொடங்கும் அருணா ஜெகதீசன்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தவிர 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். இருப்பினும் தடை உத்தரவையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை பின்வாங்கியது.

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சில சமூக அமைப்புகள் தான் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த விசாரணையை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. இவர், 2009ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2015ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின் தனது விசாரணையை துவக்குகிறார். முதற்கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவருக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close