தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சந்தீப் நந்தூரி நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று இவர் வணிகர் சங்கங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 நாள் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். வன்முறையில் 101 பேர் காயமடைந்ததாகவும், 74 இரு சக்கர வாகனம், 24 நான்கு சக்கர வாகனம் எரிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும் 1 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
மக்களின் பிரதான கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் கூறினர். வன்முறை தொடர்பாக 65 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டதாவும், ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் தூத்துக்குடியில் தற்போது அமைதியான நிலை திரும்பியுள்ளதாகவும், மக்களின் அன்றாட பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நந்தூரி தெரிவித்தார்.