ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தால்தான், பலியானவர்களின் உடல்களை பெறுவோம் என இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து பங்குத்தந்தை மற்றும் மீனவ அமைப்புப் பிரதிநிதிகள் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான அரசாணை குறித்த உங்கள் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். பின்னர் நிருபர்களிடம் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

‘தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ 1.04 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பிவிட்டது. வங்கிகள், ஏடிஎம்.களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காதபடி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன .முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா கூறியதாவது: ‘கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சித்தரவதை செய்யப்படவில்லை. சட்ட விரோதமாக யாரையும் பிடித்து வைக்கவில்லை’ என்றார் அவர்! தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 95 பேர் நேற்று நீதிபதியின் ஆய்வைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close