Thoothukudi Sterlite Copper Plant: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 21 வரை திறக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. அங்கு பெருமளவில் சுற்றுச் சூழலுக்கு இந்த ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக ஆலை தொடங்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நடைபெற்று வந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி போராட்டக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 13 பேர் பலி ஆனார்கள். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும், ஆலையை திறக்க அனுமதி வழங்கியும் கடந்த 15-ந் தேதி தீர்ப்பு கூறியது.
இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, கடந்த 19-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு ஒரு முறையீடை தாக்கல் செய்தார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் அந்த ஆலை திறக்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகளை சுற்றுப்புற மக்கள் சந்திப்பார்கள் என்றும் முறையிட்டார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வைகை, ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற பசுமை தீப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 15-ந் தேதி அன்று பிற்பகலில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது அன்றையதினம் காலை 7.39 மணி அளவில் வேதாந்தா குழுமம் சார்ந்த ஏஜென்சிக்கு இந்த தீர்ப்பு நகல் இணையதளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறினார்.
தொடர்ந்து மூத்த வக்கீல் வைகை முன்வைத்த வாதத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலை வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தபோது, இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை ஏற்கப்படவில்லை.
காற்று, நீர் குறித்த சட்டத்தின்படிதான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்து உத்தரவிட்டு உள்ளது. தமிழக மக்களும், மாநில அரசும் எதிர்க்கும் திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி இருப்பது சட்டவிரோதம். இந்த தீர்ப்பு, மக்களையும், மாநில அரசையும் அவமானப்படுத்தும் ஒரு செயலாகும்.
இந்த தீர்ப்பின் மூலம் அடுத்த 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். கோர்ட்டின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.’ என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள் அவகாசம் உள்ளது. எனவே தமிழக அரசு இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்துதான் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்றனர்.
அதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பாஸ்கரபாண்டியன், ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக’ தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதற்கு வருகிற மார்ச் மாதம் 14-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா? என்பதை ஜனவரி மாதம் 21-ந் தேதி இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.
இந்த வழக்கு குறித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், வேதாந்தா நிறுவனம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி மாதம் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.’ என குறிப்பிட்டனர்.
இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.