தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி சந்திக்க மறுத்தாரா? நடந்தது என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேற்று முன்தினம் (மே 22) வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியானார். ஏற்கனவே காயம் அடைந்த இன்னொருவரும் பலியானதை தொடர்ந்து, சாவு எண்ணிக்கை 13 ஆனது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். காலை 11.30 மணியளவில் முதல்வர் தன்னை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறி ஸ்டாலின் தர்ணா செய்தார். அவரை முதல்வர் அலுவலகம் இருந்த பகுதியில் இருந்து குண்டுகட்டாக போலீஸார் அப்புறப்படுத்தினர். பின்னர் தலைமைச் செயலகம் எதிரே அவர் மறியல் நடத்தி கைதானார்.
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ‘எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்க நான் மறுக்கவில்லை. சட்டமன்றம் கூடவிருப்பதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வந்தனர்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்டதற்கு அடையாளமாக ஸ்டாலின் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் எனக்கு எதிரே ஸ்டாலின் அமர்ந்திருந்தார். திடீரென அவர் கூட்டத்தில் இருந்து எழுந்து வெளியே சென்றார். நான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்த நேரத்தில் எனது அறைக்கு சென்று, நான் அவரை சந்திக்க மறுத்ததாக தர்ணா செய்திருக்கிறார்.
ஸ்டாலின் என்னை சந்திக்க விரும்பியிருந்தால், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எனக்கு எதிரே உட்கார்ந்தபோது அதை கூறியிருக்கலாம். ‘கூட்டம் முடிந்ததும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்’ என தெரிவித்திருக்கலாம். என்னிடம் ஏதாவது மனு கொடுக்க நினைத்திருந்தால், அங்கேயேகூட தந்திருக்கலாம்.
ஆனால் அங்கே எதுவும் கூறாமல் வெளியே சென்று, நான் சந்திக்க மறுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக விளம்பர நோக்கோடு ஸ்டாலின் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது அவரோடு வந்த தலைவர்களுக்கும் தெரியும். துரைமுருகன் உள்பட அனைவரும் அங்குதான் இருந்தார்கள்’ என குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்த சூழல் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார்.