ஸ்டெர்லைட்-ஐ நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்காதது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மக்கள் சார்பில் அரசும் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

ஸ்டெர்லைட்-ஐ நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்காதது ஏன்? என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார். துப்பாக்கி சூடு குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். கடந்த 22-ம் தேதி முதல் அங்கு பதற்றம் நிலவியது. இன்று காலையுடன் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிற சூழலில் அதே மாவட்டத்தை சேர்ந்தவரும், செய்தித்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ இன்று தூத்துக்குடி வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக அங்கு இயங்கி வரும் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, டேவிதார், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ராம்பா ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்களை அமைச்சர் பார்வையிட்டார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை சந்தித்து அரசு சார்பிலான உதவித்தொகையை வழங்கினார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘ஸ்டெர்லைட் ஆலை 9-4-2018 முதல் இயங்காமல் நிறுத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அனுமதியை புத்துப்பித்து கொடுக்கவில்லை. ஏப்ரல் 8-ம் தேதியுடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி முடிந்ததும், ஒருநாள்கூட தாமதிக்காமல் மறுநாளே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

நிறுத்தப்பட்ட ஆலைக்கு போராட்டம் வேண்டாம் என பலமுறை மக்களிடமும், போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டோம். ஆனாலும் ஜனநாயக ரீதியாக போராடியவர்களுக்கு அனுமதியும் கொடுத்து, பாதுகாப்பும் அரசு கொடுத்தது. காரணம் அரசும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என மக்களின் மனநிலையில்தான் இருந்தது.

மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என அறிவிப்பு வந்ததும், போராட்டக்காரர்களை அழைத்து அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கினார். அருகில் பள்ளி மைதானத்தில் கூடி உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அதை மீறி முதல்வர் கூறியதுபோல சில சமூக விரோத சக்திகள் ஊடுருவி பெட்ரோல் பாம்ப் வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 98 வாகனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. 48 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்பிறகும் பல முறை எச்சரித்து வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு ககந்தீப்சிங் பேடி, டேவிதார் என இரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அனுப்பி 144 தடை உத்தரவு இருந்த நிலையிலும் மக்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்று 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து ஆய்வு நடத்தினேன்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலையும் முதல்வர் அறிவித்தபடி வழங்கப்பட இருக்கிறது. காயமடைந்தவர்களுக்கும் அரசு உதவித்தொகை இன்று வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தரமான சிகிச்சையையும் உறுதி செய்திருக்கிறோம்.’ என்றார் கடம்பூர் ராஜூ.

‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அரசாணை வெளியிட வேண்டும் என மக்கள் கேட்கிறார்களே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர், ‘அதையும் தாண்டி இந்த ஆலை இயங்கக்கூடாது என்பதற்காகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. முதல்வர் அனுமதி பெற்று நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் இது தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மக்கள் சார்பில் அரசும் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதில் முடிவு கிடைக்கும்போது அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்படும். ஆனால் அந்த ஆலையை இயங்க விடுவதில்லை என்கிற கொள்கை முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது.’ என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

 

×Close
×Close