தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தையொட்டி, கடந்த 22-ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர் அதனை அவசர வழக்காக நேற்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் டி.ரவீந்திரன், வேல்முருகன் அனுமதி அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்க செல்லும் வழக்கறிஞர்களை தடுக்க கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமான மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரை பணி செய்ய தடை விதிக்க வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உடலை தனியார் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.

இதனையடுத்து நேற்று உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் மறு உத்தரவு வரும் வரை பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க வழக்கறிஞர்களை அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து உடலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவில், மாற்றம் செய்ய கோரி தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்து. அதில் இறந்தவர்களின் உடலை கோரி அவர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே நேற்று பிறப்பித்த உத்தரவில், மாற்றியமைக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, ‘ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வாறு கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளதோ அதே போல் அவரின் மரணத்திற்கு பிறகு அவரின் உடலை கண்ணியமாக அடக்கம் செய்ய உரிமை உள்ளது. இந்த வழக்கில் இறந்தவர்களின் உடலை கோரி அவர்களின் குடும்பத்தினர் அரசிடம் கோரியுள்ளனர். எனவே தான் இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், இது போன்ற வழக்குகளில் உயிரிழந்தவர்களின் உடலை எவ்வாறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை கடை பிடித்து பிரேத பரிசோதனை செய்யப்படும்’ என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, ‘அரசு பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி கடிதம் பெற்றுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சட்ட உதவிகள் அளிக்க வேண்டும். எனவே தற்போதைய நிலையில் நேற்று பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கூடாது’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உடல்களை கேட்டு குடும்பத்தினர் நீதிமன்றம் வராத நிலையில் அரசுக்கு இதில் என்ன விளக்கம் தேவை?’ என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் இதற்கு விளக்கம் அளித்து வாதிட்ட போது, ‘தற்போது வழக்கு தொடர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இல்லை’ என தெரிவித்தார்.

இதனையடுத்து தற்போதைய நிலையில், நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதிகள் அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். வழக்கின் விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய விசாரணையின் போது தமிழக அரசு மனுவிற்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்பிற்கும், தற்போதைய நிலை தொடர்பாக அரசும் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close