தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது? என்பது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேற்று முன்தினம் (மே 22) வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியானார். ஏற்கனவே காயம் அடைந்த இன்னொருவரும் பலியானதை தொடர்ந்து, சாவு எண்ணிக்கை 13 ஆனது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ‘எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்க நான் மறுக்கவில்லை. பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக விளம்பர நோக்கோடு ஸ்டாலின் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது அவரோடு வந்த தலைவர்களுக்கும் தெரியும். துரைமுருகன் உள்பட அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை மீது 23-3-2013 அன்று பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் 27-3-2013 அன்று அம்மா அரசு மின் இணைப்பைத் துண்டித்தது. பிறகு ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி, மின் இணைப்புக்கு உத்தரவு பெற்றார்கள். அந்த ஆணையை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி புதுப்பித்தலுக்காக அண்மையில் விண்ணப்பித்தார்கள். அந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுப்படி மின் இணைப்பும் இன்று துண்டிக்கப்பட்டிருக்கிறது. 2011-ல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அம்மா என்ன நிலை எடுத்தாரோ, அதே நிலையைத்தான் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த நான்கைந்து மாதங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 14 முறை ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மூலமாக அந்தப் பகுதி மக்களை அழைத்து தெரிவித்திருக்கிறோம். அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது குறித்து 14-4-2018 அன்று மாவட்ட ஆட்சியர் மூலமாக அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இன்றி அந்த ஆலை இயங்கவே முடியாது.
பல முறை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியிலேயே அந்தப் பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்த முறை எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரது தூண்டுதல் மற்றும் சமூக விரோதிகள் தலையீட்டால் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. இது வரை மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு நிறைவேற்றியே வந்திருக்கிறோம்.
துப்பாக்கி சூடு விரும்பத்தகாத சம்பவம்! 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். முதலில் தடியடி, தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு நடத்தி போலீஸார் எச்சரிக்கை செய்தார்கள். கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் எரிப்பு, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு தீவைப்பு என வன்முறை ஏற்பட்ட பிறகே துப்பாக்கி சூடு நடத்தினார்கள்’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.