தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: மக்கள் உயிரிழந்ததை அறிந்த பிரதமர் வேதனை! - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு LIVE UPDATES

பகல் 01.35 – தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பகல் 01.15 – தூத்துக்குடி மக்கள் இயல்பு நிலை திரும்ப சற்று அமைதி காக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மக்கள் உயிரிழந்ததை அறிந்த பிரதமர் வேதனை அடைந்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகல் 12.50 – தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நான், துணை முதல்வர், ஸ்டாலின், துரைமுருகன் என எல்லோரும் அமர்ந்து இருந்தோம். அப்போதே, ஸ்டாலின் என்னிடம் மனுவை கொடுத்து இருக்கலாம். இல்லையெனில், அலுவல் கூட்டம் முடிந்த பிறகு, எனது அறையில் வந்து கொடுத்திருக்கலாம். நான் ஸ்டாலினை பார்க்காமல் தவிர்த்திருக்க மாட்டேன். அதையெல்லாம் விட்டுவிட்டு, வெளியே வந்து இப்படியொரு நாடகத்தை நடத்தியிருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர். தங்கள் சுயலாபத்திற்காகவும் செயல்படும் சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூக விரோத அமைப்புகளும் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம்” என்றார்.

பகல் 12.40 – தூத்துக்குடி அரசு பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அரசுப் பேருந்து பணிமனையில் பெட்ரோல் குண்டு வீச்சு.

பகல்  12.30 – தலைமைச் செயலகத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கிறார்.

பகல் 12.20 – தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டுகள் எரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் டயர்களையும் எரித்துவிட்டு சென்றுள்ளனர்.

பகல் 12.10 – துப்பாக்கிச் சூடுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை திமுக போராட்டம் தொடரும். டிஜிபியும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வேனில் இருந்தபடியே ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பகல் 12.00 – ஸ்டாலினை கைது செய்து வேனில் ஏற்றிய பின்னர், நூற்றுக்கணக்கான திமுகவினர் வேனை சுற்றி வளைத்தனர். வேனை வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

காலை 11.50 – தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 11.35 – தலைமைச் செயலகம் முன்பு ஸ்டாலின் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முதல்வரே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும். அதேபோல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 11.25 – தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பாக அமர்ந்து ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் முழக்கமும் எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் முதல்வரை சந்திக்க ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 11.15 – இன்று காலை நடைபெற்ற பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளன. வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மூன்று நாட்களாக தூத்துக்குடி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. போலீசார் என்னை கூட சுட்டுத் தள்ளட்டும்; நான் தாங்கிக் கொள்கிறேன். என் மீது வழக்கு போடுவதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும்” என்றார்.

காலை 11.10 – தூத்துக்குடி மக்களை நாங்கள் நிச்சயம் சந்திப்போம். தூத்துக்குடி விவகாரம் துரதிருஷ்டவசமானது; அதில் அரசியல் பார்க்கக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காலை 10.55 – தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு ராகுல் காந்தி தான் மன்னிப்பு கேட்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டிற்கு அரசியல்வாதிகளே காரணம் என தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

காலை 10.45 – மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை பிற்பகலில் அவசரமாக விசாரிக்கிறது உயர்நீதிமன்றம். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை.

காலை 10.40 – செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவல்துறை, தமிழக அரசு மீது தூத்துக்குடி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தூத்துக்குடியில் போலீசாரை காப்பாற்றியவர்களையே சுட்டுக் கொன்றுள்ளனர். 3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என்றார்.

காலை 10.30 – நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே. பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தடையை மீறி சந்தித்ததால் போலீஸ் நடவடிக்கை.144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்றதால் 143,188,153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

காலை 10.20 – தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரீஸ் மனுதாக்கல். தேசிய மனித உரிமைகள் ஆணையமே குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு. சம்பவத்திற்கு காரணமான போலீசிடமே அறிக்கை கேட்டால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.

காலை 10.00 –  துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆம் நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துக்குடியில் கடைகளும் 3 ஆம் நாளாக மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

காலை 09.45 – ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை அடுத்து மின்வாரியம் நடவடிக்கை.

×Close
×Close